சென்னை: மின்சாரத் துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி, 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. தன் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு அப்போது செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்துசெய்ய எதிர்ப்புத் தெரிவித்து, உதவிப் பொறியாளர் தேர்வில் கலந்துகொண்ட இருவர் சார்பில் முறையிடப்பட்டது. பணம் வாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வேலை வழங்கியதால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பு பறிபோய்விட்டதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என வாதிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினால் அவர்களை விசாரிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை எனக் கூறிய நீதிபதி, ஏற்கனவே தாக்கல்செய்து நிலுவையில் உள்ள வழக்கை, இந்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி - அரசு பள்ளி ஆசிரியை ஹேமலதா