சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியதுபோல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், "ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து வாதிட வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.