சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டர் களம் இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட ரோவர் வாகனம், ஊர்ந்து சென்றபடியும் நிலவில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆதித்யா எல்1:சூரியன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 15 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதன் பலனாக இஸ்ரோ சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல்1 என்ற அதிநவீன விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் முழுவதும் மேக் இன் இந்தியா திட்டம் கீழ் செய்யப்ட்டுள்ளது.
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில், இந்த ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தில் இருக்கும் கருவிகள், சூரிய காந்த புயலின் தாக்கத்தையும், அதன் விளைவுகள் குறித்தும், சூரியனின் வெளிபுறத்தில் உள்ள கரோனா (corona) எனப்படும் இடத்தையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சூரியனை பற்றி ஆய்வு செய்ய உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.424 கோடி மதிப்பிலும் 1,475 கிலோ மொத்த எடையிலும், 7 நவீன கருவிகள் கொண்ட ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் 244 கிலோவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநரும் தமிழர் தான்: சந்திரயான் 1, 2, 3 திட்டங்களில் முறையே மயில்சாமி அண்ணாதுரை, முத்தையா வனிதா, வீர முத்துவேல், என தமிழர்கள் திட்ட இயக்குராக இருந்தது போல், தற்போது, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசி மாவட்டம் செங்ககோட்டை பகுதியை சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றுகிறார்.
தென்காசியில் 12-ஆம் வகுப்பில், மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்தவர், பிறகு, நெல்லை அரசு கல்லூரியில், கல்லூரி படிப்பை முடித்து, பிர்லா தொழிநுட்ப நிறுவனத்தில், உயர்கல்வியை முடித்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.
எல்-1 பாயிண்ட் நிலைநிறுத்தல்: இந்த எல்-1 புள்ளி தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும் இடமாகும். அதாவது, எந்தவொரு கோளை சுற்றியும் 5 இடங்களில் நிலையான ஈர்ப்பு விசை புள்ளிகள் இருக்கும். அந்த இடங்கள் ஆய்வுப் பணிகளுக்கு சாதகமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியனை நோக்கி நகர்த்தி செல்லப்படும். பின்னர் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ரேஞ்ச்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும்.
ஆதித்யா எல்-1: பயணப்பாதையை குறித்து கொடைக்கானல் சூரிய ஆய்வக தலைமை விஞ்ஞானி, "எபினேசர் செல்லச்சாமி கூறியதாவது, “ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக நீண்ட பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அதன் இலக்கு பாதையை அடைய 109- நாட்களில் இருந்து 120- நாட்கள் ஆகும். இந்த 120 நாட்கள் பயணத்தில் ஆதித்தியா எல்-1 பல்வேறு சவால்களை சமாளிக்க உள்ளது.
முதலில் பூமியில் இருந்து, நீள்வட்டப்பாதையில் அதன் பயணத்தை தொடங்க உள்ளது. பூமியில் இருந்து ராக்கெட் ஆனது, விநாடிக்கு 11.2 கீ.மீ அதாவது, பூமியின் விடுபடு திசை வேகத்தில் அளவிலான (11.2 K.M.,per/sec[40320km per hour] வேகத்தில் ராக்கெட்டானது சென்றால் தான் அது, மையநோக்கு விசையில் இருந்து விடுபட்டு நீள்வட்ட பாதையை அடைய முடியும். அவ்வாறு நீள்வட்டப்பாதையை அடைந்த பிறகு, பூமியில் இருந்து வெளியேறும் புள்ளியில் இருந்து, எல்.1 புள்ளியை நோக்கி அதன் பயணத்தை தொடரும்” என்றார்.