சென்னை:சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா L1 விண்கலம் தற்போது, L1 புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள சென்சார்கள் அதிவெப்ப ஆற்றலை அளவிடும் பணியை தொடங்கி உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா L1 என்ற விண்கலம் கடந்த செப். 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி. 57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா L1 வெற்றிகரமாக தனியாகப் பிரிந்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
சூரியனை நோக்கி அதன் சுற்றுவட்ட பாதையை படிப்படியாக உயர்த்தும் பணிகள் மூன்று கட்டமாக நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து செப்.15ஆம் தேதி நான்காவது முறையாக சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிப்பட்டது. சூரியனை ஆய்வு செய்தவற்கான பயணம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று (செப்.18) ஆதித்யா L1 தனது ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலில், "ஆதித்யா L1 விண்கலம் தனது அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது. ஸ்டெப்ஸ் (STEPS) கருவியின் ஏஎஸ்பிஎக்ஸ் சென்சார்கள் பூமியில் இருந்து, சுமார் 50,000 கி.மீ தொலைவில் இருக்கும் அதிவெப்ப ஆற்றலை அளவிடும் பணியைத் தொடங்கியது. இந்த கருவியில் ஆறு சென்சார்கள் கடந்த 10ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின.