சென்னை:தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறையின் வளர்ச்சிக்கு அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகின்ற ஜன.7, 8 ஆகிய இரண்டு நாட்கள் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' (Global Investors' Meet 2024) நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடுகளை மிஞ்சும் வகையில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களும் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றும் விதமாக 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரு லட்சிய இலக்கை நிர்ணயத்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த நோக்கத்திற்காக தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வரும் ஜன.7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருப்பதாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.