தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்டைத் தமிழர்களின் வீர வரலாறு - சென்னையில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வு கண்காட்சி!

பண்டைத் தமிழர்களின் வீர வரலாற்றை உலகிற்கு பறைசாற்றி வரும் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.

கண்காட்சி
கண்காட்சி

By

Published : Dec 29, 2021, 11:11 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வு மாதிரிகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்களின் நாகரிகம், வீரம், தமிழ் வளர்ச்சி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கண்டுபிடிக்க ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் அகழாய்வு நடத்தப்படுகிறது. கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் அகழாய்வின்போது தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரிலிருந்து எடுக்கப்பட்ட சுடுமண் தாழிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாழியில் மனித எலும்புகளின் எச்சங்கள், பலவகை சுடுமண் கொள்கலன்கள் இருந்தன. அந்த கொள்கலன்களின் உள்ளே இரும்பு, வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்கள் பல இருந்தன.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வு கண்காட்சி

ஆதிச்சநல்லூர் அகழாய்வு

அகழாய்வில் கிடைக்கப்பட்ட பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் எனக் கருதி விரிவான ஆராய்ச்சிக்குப் பின், அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழர்கள் பல ஆண்டுகளாக வழி வழியாக பூமியில் வாழ்ந்து வருகிறார்கள் எனத் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரிகம் பிறந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இது தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் இருப்பதால் அங்கு விவசாயம் செழித்திருக்கக் கூடும் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

1900களில் தொல்லியல் வல்லுநர் அலெக்ஸாண்டர் ரியாவால் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு கண்டெடுக்கப்பட்ட தனித்துவமானப் பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

கீழடி அகழாய்வு மாதிரிகள்

2600 ஆண்டுகள் பழமையான கீழடிப் பொருட்கள்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது. கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. இதில், அங்கு தொழிற்சாலைகள், மக்கள் நகர்ப்புற வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொழிற்சாலைகளின் எச்சங்கள், வீடுகளின் பொருட்கள், சுடுமண் கொள்கலன்கள், அணிகலன்கள், உலோக கருவிகள், முதுமக்கள் தாழி என ஐந்தாயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் சுமார் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. கீழடியில், ஒரு சங்ககால தமிழ் நாகரிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சி

கீழடி, வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது வைகை நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. நகர்ப்புற திட்டமிடல் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த இந்த இடத்தில், மண்பாண்டங்கள் செய்தல், உலோக வேலை செய்தல், கால்நடை வளர்ப்பு, விவசாயம், நெசவுத் தொழில்கள் செழித்திருந்தன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு மாதிரிகள்

அதுமட்டுமில்லாமல் கீழடியில் அகழ்வாராயப்பட்ட சுடுமண் உறைகிணறுகள், மழைநீர் வடிகாலாக செயல்படுத்தப்பட்ட பள்ளங்கள், இரட்டைத் துளைகளைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவற்றின் மாதிரிகளும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இவை கீழடியில் உள்ளது போல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்லூரி மாணவர் சித்தார்த், "கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை புகைப்படமாக மட்டுமே பார்த்து வந்தோம். நேரடியாக பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசின் முயற்சியால் இங்கு அந்த பொருட்கள் கொண்டு வந்து கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

இது என்னைப் போன்று வரலாற்றுப் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். வரலாற்றை திரும்பிப் பார்க்க வாய்ப்பாக உள்ளது. உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது" என்றார்.

இந்த கண்காட்சியில் அகழாய்வுப் பொருட்கள் மட்டும் இல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை வீரர்களின் புகைப்படங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் புகைப்படங்கள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், புத்தகங்கள் என 165 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி விடுதலை போரில் பங்குபெற்ற தமிழ்நாடு வீரர்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

பாரதியார் கைப்பட எழுதிய நூல்

பாரதியாரே அவர்தம் கைப்பட எழுதிய நூல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் சிறந்த கவிதைத் தொகுப்புகள், பதஞ்சலி யோகசூத்திரம், சந்திரிகையின் கதை போன்ற படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள், வாக்கியங்கள், மேற்கோள்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியம்

பாஷ்யம் ஆர்யா, கே.வி.வைத்தியநாதன், ஏ.பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.மணியன் மற்றும் எஸ்.என். சங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த மகாத்மா காந்தி, நேரு, திலகர், நேதாஜி, லாலா லஜ்பத்ராய் ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

திப்பு சுல்தான் பயன்படுத்திய பீரங்கி

திப்பு சுல்தான் பயன்படுத்திய 250 ஆண்டுகள் பழமையான பீரங்கி இங்கு வைக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜெர்மனியின் தாக்குதலின் போது இந்திய விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் என்ற தமிழரின் உதவியுடன், மதராஸில் எம்டன் என்ற கப்பலில் இருந்து வீசப்பட்ட இரும்பினால் செய்த குண்டுகளின் மிச்சங்கள் 4 எண்ணிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

அதுமட்டுமல்லாமல் மன்னர்கள் போரின்போது பயன்படுத்திய வாள்கள், ஆயுதங்கள், ஈட்டிகள், கத்திகள், போர் கோடாரிகள், கவச உடைகள் இங்கு உள்ளன. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகளின் உருவங்கள் கொண்ட மயில்யாழ் என்ற இசைக்கருவியும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தத்ரூபமான மாதிரிகள்

இதுகுறித்து மோகன் என்ற பார்வையாளர் கூறுகையில், "கீழடிக்குச் சென்று இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போது இங்கே அதைப் பார்த்துவிட்டேன். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், மாபெரும் தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது.

தமிழ் எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகளைப் பார்க்கும்போது தமிழ் மொழி தொன்மையான மொழியாகவும், பழமையான மொழியாகவும், வழக்கத்திலிருந்த மொழியாகவும் இருந்திருப்பதைக் காண முடிகிறது" என்றார்.

சிம்சிம் என்ற மாணவி கூறும்போது, "நான் முன்பே கீழடிக்குச் சென்று இதையெல்லாம் பார்த்துள்ளேன். கீழடியில் உள்ளதுபோல் மாதிரி அமைப்புகள் இங்கு அழகாக அமைத்துள்ளனர். கீழடியில் என்ன பார்த்தேனோ அதை இங்கு பார்த்தேன். மிகவும் பிடித்திருக்கிறது" என்றார்.

கீழடி அகழாய்வு பற்றி புத்தகங்களில் உள்ளதை விட நேரில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு பழமையான பொருட்களை பார்த்ததில் மகிழ்ச்சி என்றார், மாணவி, யாழ் நங்கை.

இலவச அனுமதி

இந்தக் கண்காட்சியை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும் இந்த கண்காட்சி வருகின்ற பொங்கல் வரை ஒரு மாத காலம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. பெற்றோர்களும் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளை கூட்டிச் சென்று விடுமுறையை கழித்தவாறே அறிவார்ந்த தகவல்களையும் கற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: காந்திஜி குடை, நேதாஜியின் நாற்காலி - 'விடுதலைப் போரில் தமிழகம்' கண்காட்சியைக் காண மக்கள் ஆர்வம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details