சென்னை: தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென கடந்த ஜூன் மாதம் தலைமையிட ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது, பத்திரிக்கையாளர் வாராகி, மத்திய அரசில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதம் வெளியானது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசுக்கு அவர் அளித்த புகாரில், 2018 இல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை மதுரை மாநகர காவல் துறை ஆணையராக இருந்தபோது சுமார் 200க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரிக்கப்பட வேண்டும் என வாராகி என்ற பத்திரிகையாளர் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவரது புகாரில் டேவிட்சன் தேவாசீர்வாதம், அவரது மனைவி நடத்திய டிராவல் ஏஜென்சி மூலமாக இந்த போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார். தமிழக அரசு இந்த புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் பதிவு இந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தலைமை பற்றிய அமெரிக்க எழுத்தாளர் கூறியதை அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்தப் பதிவில், "மோசமான தலைவர்கள் எல்லா நேரத்திலும் கட்டுப்பாடுகளை முன்னிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என நம்புவார்கள்.
தொடர்ந்து தன்னை பின் தொடர்ந்து அவர்களை கட்டுப்படுத்தி வைப்பதற்காக அடிக்கடி ஆய்வுகள் மற்றும் கூட்டங்கள் நடத்தி கட்டுப்படுத்த முயல்வார்களே தவிர அதற்கு மேல் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் ஒட்டுமொத்த அமைப்பை பலவீனமாக மற்றும் பாதிக்கப்படக் கூடிய அளவிற்கு செய்வார்கள்.
ஒரு தலைவர் தான் நடத்தும் கூட்டங்களை எப்படி சிறிய அளவிலும், இனிமையாகவும் நடத்த வேண்டும் எனத் தெரியாவிட்டால் அவர் வெறும் திறன் இல்லாத மற்றும் பலவீனமானவர் என்பதை தவிர எதுவும் இல்லை" என்ற பதிவிட்டு உள்ளார். இந்த பதிவானது காவல்துறை உயரதிகாரி ஒருவரை மறைமுகமாக குறை கூறும் படி உள்ளதாக கூறப்படுகிறது. டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டுள்ள பதிவு காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!