திருச்சி-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-திருச்சி, அரக்கோணம்-கோவை அதிவிரைவு சிறப்பு ரயில்கள் வரும் 12ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக காலை 11 மணிக்கு செங்கல்பட்டுக்குச் சென்றடைகிறது.
மீண்டும் அங்கிருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. 2 ஏசி பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளுடன் நாள்தோறும் இந்தச் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி உள்பட 23 பெட்டிகளுடன் தினமும் செங்கல்பட்டிலிருந்து திருச்சி வரை ரயில் இயக்கப்படவுள்ளது.
அதேபோல், அரக்கோணம்-கோவை அதிவிரைவு சிறப்பு ரயில், 2 ஏசி பெட்டிகள் உள்பட 24 பெட்டிகளுடன் நாள்தோறும் காலை 7 மணிக்கு அரக்கோணத்திலிருந்து புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 2.05 மணிக்கு கோவை செல்கிறது. மீண்டும் அங்கிருந்து 3 மணிக்குக் கிளம்பி இரவு 10 மணிக்கு அரக்கோணத்தை அடைகிறது.
இந்த மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக குளிர்சாதன வசதியை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், சிறப்பு ரயில்கள் ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் - தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!