சென்னை:திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழ்நாட்டில் வருகிற 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. இந்நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார். சி. சரத்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பழைய அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதுபோல் குறிப்பிட்ட விதிமீறல்களில் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாவது முறையாக புதிய அபராதத்தொகை அட்டவணையின்படி கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். உயர்த்தப்பட்ட புதிய அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இனி அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏற்கெனவே அழைப்பு மையங்கள் மூலம் விதி மீறல்களில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 23 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 12.5 விழுக்காடு (60 உயிரிழப்புகள்) குறைந்துள்ளன.
அபராதத்தொகை விதிக்கப்பட்டவர்கள் பழைய அபராதத்தொகைக்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. 28ஆம் தேதி முதல் விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கே தற்போது விதிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்டுள்ள அபராதத்தொகை பொருந்தும்.
அதேபோல போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்லாமல், சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மேல் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கும் 170 இ-செலான் மிஷன் மற்றும் 72 பிரீத் ஆனலைசர் கருவி கொடுக்கப்படும். அவர்கள் மூலமும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்து அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.