சென்னை:நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் 2வது கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தார். அதன் பேரில் 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் துறையினர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் வன்புணர்வு, மோசடி மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் சீமானை காவல் துறையினர் கைது செய்யவில்லை. இதனையடுத்து சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் சமூக வலைதளங்களில் மோதல்கள் நிகழ்ந்தது. சீமானின் ஆதரவாளர்கள் சிலர், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
மேலும், 2020ஆம் ஆண்டு சீமான் மீது மற்றொரு புகாரை திருவான்மியூர் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கொடுத்தார். இதன் பிறகும் சீமான், விஜயலட்சுமி சர்ச்சை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீமான் மீது இன்று (ஆக.28) நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விஜயலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “2011ஆம் ஆண்டு சீமான் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி நான் காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டேன். திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, எனக்கு வாழ்வா-சாவா போராட்டம் இது.
சீமான் இளக்கார மனிதர். எனக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படைத் தலைவர் வீரலட்சுமி துணையாக இருக்கிறார். சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு ஆதரவு கொடுங்கள். சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். காவல் துறை கண்டிப்பாக சீமானை கைது செய்ய வேண்டும். என்னை காசுக்காக பேசுபவர் என ஊடகங்கள் எழுதி விட வேண்டாம். என்னைக் கேவலமாக எழுதி விட வேண்டாம்" என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "நான்தான் சீமானின் மனைவி. ஆனால், அவர் என்னை கேவலப்படுத்தி கொண்டிருக்கிறார். 11 ஆண்டுகளாக வழக்கில் அவரை கைது செய்யவில்லை. இந்த முறை நான் விட மாட்டேன். அவரை கைது செய்ய வைப்பேன். சீமான் இந்த வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம். திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியதாலேயே நான் மேல்நடவடிக்கை வேண்டாம் என காவல் துறையினரிடம் தெரிவித்ததால், வழக்கில் முன்னேற்றமில்லை. கடந்த அதிமுக அரசுதான் சீமானை காப்பாற்றி உள்ளது” என்றார்.