சென்னை: தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ’மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் வரும் மே 19 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதற்கு முன் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியான 'கொன்றால் பாவம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் தயாள் பத்மநாபன் “கொன்றால் பாவம் மாதிரி தரமான படம் மூலமாக ஆதரித்த அனைவருக்கும் வணக்கம். பொதுவாக ஒரு இயக்குநருக்கு ஒரு மொழியில் படம் கொடுக்கும் போது, குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதம் ப்ரேக் வேண்டும். மார்ச் 10-ல் கொன்றால் பாவம் ரிலீஸ் ஆனது. நல்ல ஒரு திட்டமிடல் இருந்தது. 'குரங்கு பொம்மை' போன்ற படத்தை ரீமேக் செய்ய யாருக்கும் தைரியம் வராது. ஆனால் நான் செய்தேன். 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' கரோனா காலத்தில் கதை எழுதியது.
வேறு மாதிரியான திரைக்கதை. கண்டிப்பாக நீங்கள் பாராட்டுவீர்கள். ரொம்ப நாள் படப்பிடிப்பு நடைபெற்ற படம் இது. 21 நாட்களில் செய்து முடித்து விட்டேன். கொன்றால் பாவம் 14 நாட்களில் எடுத்தேன். 2 பாடல்கள் மட்டுமே என்பதால் நானே பாடல்கள் எழுதிவிட்டேன். இடைவெளி காட்சியில் இருந்து ஆரவ் என்ட்ரி இருக்கும். சந்தோஷின் வளர்ச்சிக்கு இந்த கதாபாத்திரத்தை யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சந்தோஷ் பிரதாப் நடித்தார். முழு படத்தையும் பெங்களூரூவில் படமாக்கினோம். அனைவருக்கும் நன்றி” என்றுக் கூறினார்.