சென்னை: 'கிராண்மா' படத்தின் நிகழ்ச்சியில்நடிகை சோனியா அகர்வால் பேசியுள்ளார்: 'இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தபோது பல கதாநாயகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால்,இது ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இருந்ததால் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இக்கதாபாத்திரம் பிடித்ததனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன். தமிழில் சிறிது காலம் நடிக்கவில்லை.இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் வெப் சீரியல்களில் மட்டும் நடித்தேன்.
என்னுடன் இதே படத்தில் விமலா ராமன், சர்மிளா நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் சௌகரியமாக இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.பிரபல கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்படி பெண் பாத்திரத்தை மையமாக வைத்த படங்களில் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அது ஒரு ரகம்; இது ஒரு ரகம் அவ்வளவுதான்.
பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இதுமாதிரி பெண்ணைப் மையப்படுத்தி உருவாகும் படங்களில் பாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும். நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும்.இந்தப் படத்துக்காக இயக்குநர் சொன்ன கதையும் என் பாத்திரமும் பிடித்திருந்தது. எனவே ஒப்புக்கொண்டேன்.
பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்:கிராண்மா படத்தில் சண்டைக்காட்சியில் நடித்துள்ளேன். அது பற்றிக் கேட்கிறார்கள். சண்டைக் காட்சியில் நடிப்பது அபாயகரமானது என்ற பொருளில் கேட்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் நடிப்பது சவாலான ஒன்று தான். ஆனால், இந்தப் படத்தில் சரியாகத் திட்டமிட்டு எடுத்ததால் எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை. பெண்கள் பலசாலிகள் தான்.பொதுவாகப் பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்.