சென்னை:நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடிய வழக்கில் பணிப்பெண் சிக்கினார். திருடியதை ஒப்புக்கொண்டதால் மன்னித்து மீண்டும் அந்தப் பெண்ணை பணியாற்ற நடிகை ஷோபனா அனுமதி வழங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி, சிவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஷோபனா. பரதநாட்டிய கலைஞரான இவர் சென்னையில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி முதலிய மொழிப் படங்களிலும் நடித்து பத்ம ஸ்ரீ, கலைமாமணி போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். இவரது வீடு சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் அமைந்து உள்ளது. இந்த வீட்டின் முதல் தளத்தில் ஷோபனாவின் தாயார் ஆனந்தமும், இரண்டாம் தளத்தில் ஷோபனாவும், தரைத் தளத்தில் நடிகை ஷோபனா பரத நாட்டிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயிலை சேர்ந்தவர் விஜயா. இவர் கடந்த ஒரு வருட காலமாக நடிகை ஷோபனா வீட்டில் தங்கி ஷோபனாவின் தாயாரை கவனித்து கொள்ளும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாயார் ஆனந்தம் வீட்டில் வைத்து இருந்த பணம் சிறுக சிறுக காணாமல் போயுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த நடிகை ஷோபனா வீட்டு பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தச் சம்பவம், குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார்.