சென்னை:போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி மாநகர பேருந்து நேற்று (நவ. 3) சென்று கொண்டு இருந்தது. அப்போது, குன்றத்தூர் சாலையில், கெருகம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பஸ்சின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்து உள்ளனர்.
இதனை பின்னால் வாகனத்தில் வந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றவுடன் கீழே இறங்கி சென்ற அந்த பெண் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவரிடம் மாணவர்கள் தொங்கி கொண்டு வருகிறார்கள், இப்படியா பஸ் ஓட்டுவது என சரமாரியாக கேள்வி கேட்டு திட்டி உள்ளார்.
பின்னர், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்தபடியும், ஒருமையில் பேசி திட்டியபடியும் கீழே இறக்கி விட்டுள்ளார். மேலும் பஸ்சின் பின் படிக்கெட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இழுத்தும், முதுகில் அடித்து சட்டையை பிடித்து இழுத்து பஸ்சில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.