சென்னை: நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாகும்படி மீரா மிதுனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு முன்னிலையாகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் வரும் 9ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி தாக்கல்செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் பிணை வழங்கக் கோரி, மீரா மிதுனும், சாம் அபிஷேக்கும் இரண்டாவது முறையாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.