சென்னை:பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக, நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.
அதில், 'திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவைப் பார்த்தேன். அதில் பட்டியலினத்தோரை மிக கேவலமாக திட்டி, காணொலி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். பட்டியலின சமூகத்தையே மிக கேவலமாகவும், மோசமான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், திரைப்படத் துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் காணொலியில் பதிவிட்டுள்ளார்.
7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
ஆதிக்க சாதியினரின் தூண்டுதலின் பேரில், பட்டியலின மக்களை கேவலமாகப் பேசி காணொலி பதிவிட்ட மீரா மிதுன் மீது, பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதன்படி கடந்த 7ஆம் தேதி நடிகை மீரா மிதுன் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான கலகம் செய்ய தூண்டி விடுதல், சாதி, மத, இன தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் உள்ளிட்டப் பிரிவுகள் என மொத்தம் 7 பிரிவுகளின்கீழ், மீராமிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சவால் காணொலி வெளியிட்ட மீரா மிதுன்
அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.12) காலை 10 மணியளவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் முன் விசாரணைக்கு ஆஜராக மீரா மிதுனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இன்று (ஆக.12) விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆஜராகாதது தொடர்பான விளக்கமும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் தன்னை ஐந்து ஆண்டுகளாக கைது செய்ய முயற்சிப்பதாகவும், தன்னை யாரும் கைது செய்திட முடியாது, அது கனவில்தான் நடக்கும் எனவும் காவல் துறையினருக்கு சவால்விடும் வகையில், மீரா மிதுன் தற்போது காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் அடுத்தகட்டமாக மீரா மிதுன் மீது சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து, சைபர் கிரைம் காவலர்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க:150க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்!