சென்னை: கரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் பரப்புரை நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் நேற்று ஒரே நாளில் 1484 பேருக்கு கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், கேரளா, ஹரியானா, டெல்லி போன்ற 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை ஆயிரங்களை கடந்துக்கொண்டிருக்கிறது. உலகில் 10 நாடுகளில் 5 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் பாதிப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டில் 8970 பேருக்கு இன்று காலை நிலவரப்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் 3869 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 95 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ள 5 விழுக்காடு பேர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் 632 பேருக்கு நேற்று மட்டும் தொற்று எண்ணிக்கைப் பதிவாகியுள்ளது . செங்கல்பட்டு, கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றைக் குறைப்பதற்கு தினமும் பாதிக்கப்பட்ட இடங்களில் கள ஆய்வுகள் செய்து, தொடர்புடையவர்களையும் கண்காணித்து வருகிறோம்.
சென்னை மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் தொடர்ந்து 4 மணி நேரம் முகக்கவசம் விநியோகம் செய்தோம். 67,500 முகக் கவசங்களை பொது மக்களுக்கு வழங்க உள்ளோம். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். வரும் 10ஆம் தேதி 31ஆவது மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது. மேலும், 38.62 லட்சம் பேர் முதல் தவணையும், 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய 1 கோடியே 10 லட்சத்து 18ஆயிரத்து 627 பேருக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளோம். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
பிரதமர் 2025க்குள் காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளார். காசநோய் இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் 23 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1ஆம் தேதி நொச்சிக்குப்பம் பகுதியில் தொடங்கி வைக்க உள்ளார். காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனத்திலேயே எக்ஸ்ரே எடுக்கப்படும்.