தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நன்கொடை அளிப்பதைவிட பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளும் உதவி செய்யுங்கள் என்று தஞ்சைக் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்து அமைப்புகள் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இயக்குநர் ரா. சரவணன் இதுகுறித்து பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நடிகர் சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். இப்படப்பிடிப்பு தஞ்சையில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால் எதையுமே செட் போடாமல் லைவாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்.
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு ஜோதிகா மருத்துவமனையின் மற்ற பகுதிகளை பார்த்தார்.
அப்போது பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தத்துடன் நோக்கினார். பச்சிளம் குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.
அதனால்தான் கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். ஆயிரம் அன்ன சத்திரங்கள், ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்றுதானே ஜோதிகா பேசி இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்னர் 'கோயில் கட்டுவதைவிட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசினார் நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்திவிட்டார் எனச் சொல்ல முடியுமா?