தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை கேவலமாக பேசுவது தான் புது திராவிட மாடலா...? - நடிகை குஷ்பு ஆவேசம் - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

பெண்களைப் பற்றி கேவலமாகவும், இழிவாகவும் பேசுவது தான் புது திராவிட மாடலா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களைப் பற்றி கேவலமாக இழிவாக பேசுவது தான் புது திராவிட மாடலா...? - குஷ்பு ஆவேசம்
பெண்களைப் பற்றி கேவலமாக இழிவாக பேசுவது தான் புது திராவிட மாடலா...? - குஷ்பு ஆவேசம்

By

Published : Jun 18, 2023, 11:04 PM IST

Updated : Jun 19, 2023, 7:46 AM IST

பெண்களைப் பற்றி கேவலமாக இழிவாக பேசுவது தான் புது திராவிட மாடலா என குஷ்பு ஆவேசம்

சென்னை: சென்னை திமுக வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநர் ரவியின் செயல்பாடு குறித்தும், நடிகை குஷ்பு குறித்தும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறு பேசியிருந்தார்.

இது தொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று திமுகவில் இருக்கக்கூடிய மூன்றாம் தர பேச்சாளர் ஒரு மேடையில் என்னைப் பற்றி மிகவும் அவதூறாகவும், கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.

ஒரு மூன்றாம் தரத்தில் இருக்கக்கூடிய பேச்சாளர் தானே பெண்கள் விஷயத்தில் மிகவும் கேவலமாக மற்றும் வாய்க்கு வந்ததைப் பேசுவார். ஏற்கனவே கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஆகி மீண்டும் கெஞ்சிக் கூத்தாடி கட்சியில் சேர்ந்ததற்குப் பிறகு மீண்டும் பொது மேடையில் என்னைப் பற்றிப் பேசியுள்ளார். இதற்கு முன்பு திமுகவிலிருந்த ஒருவர் என்னை இது போன்று அவதூறாகப் பேசினார். அப்போது நான் மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இல்லை.

அந்த நபர் குறித்து நான் என் சி டபிள்யூ வில் புகார் அளித்து டெல்லி வரைக்கும் சென்று என்னிடம் மன்னிப்பு கேட்டார். இனி எந்த பெண்ணைப் பற்றியும் நான் அவதூறாகப் பேசமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார். பெண்களைப் பற்றி கேவலமாக இழிவாக பேசுவது தான் புது திராவிட மாடல் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதனால் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைத்தேன்.

ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசும் பொழுது, போனால் போகிறது என்று விட்டு விட்டால் எப்படி?. நாட்டில் இருக்கும் மற்ற பெண்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் எங்கு பெண்களுக்குப் பிரச்சனை வருகிறதோ, எனக்கும் அது குறித்து புகார் வரும். சமீபத்தில் டிஜிபியிடம் கூட இதுகுறித்து கேட்க நான் சென்று இருந்தேன்.

ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாக இழிவாகப் பேச யாருக்கும் அனுமதி கிடையாது. யாருக்கும் உரிமை கிடையாது. பெண்களைப் பற்றி இப்படிப் பேச ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள். குஷ்புவை தனிப்பட்ட முறையில் ஒருவர் தாக்கி பேசியதால் நான் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. நம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்காகவும் நான் இன்று உட்கார்ந்து பேசுகிறேன்.

குஷ்புக்கே இந்த கதி என்றால் சாலையில் செல்லும் பெண்ணுக்கு எந்த மாதிரியான பிரச்சனை வரும். அவர்கள் எவ்வளவு விஷயங்களைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பெண்களுக்கு இன்று நான் பேசுவது உதாரணமாக இருக்கும். எந்த ஆணுக்கும் ஒரு பெண்ணைப் பற்றி இழிவாகப் பேசத் தகுதி கிடையாது. திமுகவினர் பயந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று. அதனால் தான் வேறு வழி இல்லை என்று பெண்களை இப்படித் தாக்குகிறார்கள். நீ யாரு பெண்களைப் பற்றி இழிவாகப் பேச?, நீங்கள் இப்படிப் பேசும்பொழுது உங்கள் வீட்டில் உள்ள பெண்களை நினைத்துப் பாருங்கள். உங்கள் மனைவி உங்களைப் பெற்ற தாய், மகள், பேர பேத்திகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

எப்படிப்பட்ட ஆம்பளையுடன் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று இதுதான் திமுகவின் மாடலா என்று எனக்குச் சந்தேகம் வருகிறது. இது போன்ற பேச்சாளர்களை திமுக தீனி போட்டு வளர்கிறதா என்றும் முதல்வர் மற்றும் திமுகவினர் இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்டு கதவுக்கு பின்னால் சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு திமுகவில் உள்ள அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசினால் வந்துவிடுவார்கள். வாசலில் கல்லை தூக்கி அடிக்கவும், கோஷம் போடவும், எங்கே இருந்தாலும் புடவையைப் பிடித்து இழுக்கவும் பார்த்திருக்கிறேன், நடந்திருக்கிறது.

அதனால்தான் சொல்கிறேன் திமுக இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னை பற்றி மட்டும் இல்லை எந்தப் பெண்ணையாவது தவறாக பேசினால் மகளிர் ஆணைய உறுப்பினராக, யார் எங்கே பேசினாலும் நான் நடவடிக்கை எடுப்பேன். நான் நேராகவே முதல்வர் ஸ்டாலினைப் பார்த்துச் சொல்கிறேன். குஷ்புவைச் சீண்டி பார்க்காதீர்கள். திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள். என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் குஷ்பு தானே போனா போகிறது இன்றைக்குப் பேசுவாள் நாளைக்கு மறந்து விடுவாள் என்று நினைக்காதீர்கள். குஷ்பு மறக்க மாட்டாள், மன்னித்து விடுவாள். மறக்கும் புத்தி குஷ்புக்கு கிடையாது.

முதல்வர் அவர்களே, உங்கள் கட்சியில் உள்ளவர்கள் குஷ்புவை சீண்டிப் பார்க்காதீர்கள். அவர் கண்ணைப் பார்த்துப் பேசும் தைரியம் எனக்கு உள்ளது. திமுகவில் சேரும் பொழுது உங்கள் தந்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என்னிடம் சொன்ன விஷயம் மேடை நாகரீகம் என்ற ஒன்று. அதை எப்போதும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று உங்கள் கட்சியில் எவ்வளவு கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் அவர்களே நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்களா?, திமுகவில் உள்ளவர்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு குஷ்பு பதில் கொடுத்தால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், குஷ்புவைச் சீண்டிப் பார்க்காதீர்கள். அடிக்கிற தைரியம் குஷ்புவுக்கு உள்ளது. திமுகவைப் போல் பின்னாடி 10 பேர் வர மாட்டார்கள். நான் ஒருத்தி போதும் உங்களுக்கு. நீங்கள் ஆக்சன் எடுக்கும் அளவுக்கு அவர் பெரிய ஆள் கிடையாது. திமுகவிற்குத் தைரியம் இருந்தால் கட்சியிலிருந்து நீக்கட்டும், மறுபடியும் தீனி போட்டு வளர்க்க வேண்டாம்.

முதல்வர் மற்றும் திமுகவினர் இது போன்ற பேச்சாளர்களின் பேச்சைக் கதவுக்குப் பின்னால் நின்று ரசிக்கிறார்கள், சிரிக்கிறார்கள். அதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவரை சஸ்பெண்ட் செய்து மீண்டும் கட்சியில் சேர்த்தது ஏன்? செந்தில் பாலாஜியிலிருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்ற தீனி போட்டு வளர்க்கிறார்கள். மாநில முதல்வர் என்று நான் அனைத்து மரியாதையும் அவருக்குக் கொடுப்பேன்.

ஆனால், அவர் என்னைச் சீண்டிப் பார்த்தார் என்றால் முதல்வருக்கே தெரியும் திருப்பி பதிலளித்தால் எப்படி இருக்கும் என்று. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய உள்ளது. திமுகவின் தாய், தந்தை, கலைஞர் அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசி இருக்கிறார். அது தெரியாமல் திமுகவினர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாளை என் வீட்டில் 10 பேர் கல் வீசினாலும் எனக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. அதை எப்படிச் சந்திக்க வேண்டும் என்று நான் பார்த்துக் கொள்கிறேன். பெண்களைப் பற்றி பேசினால் திரும்பி அடிப்போம். நான் யாரையும் நம்பி தமிழ்நாட்டில் வரவில்லை. திறமையை மட்டும் நம்பி தமிழகத்திற்கு வந்துள்ளேன். என் திறமையை மட்டுமே நம்பி நான் இந்த இடத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். இதற்குப் பிறகு ஒரு பெண்ணைப் பற்றி இழிவாகப் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:Actor Vijay: சக்சஸில் முடிந்த 234.. விஜயின் அரசியலுக்கு விடியல் தருமா?

Last Updated : Jun 19, 2023, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details