சென்னை:அடையாறு கலாசேத்திரா மாணவிகள் அளித்த பாலியல் புகார் காரணமாக மாணவர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக நடிகை அபிராமி தெரிவித்த கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ''அடையாறு கலாசேத்திரா குறித்து அவதூறு செய்திகளை கேட்டு முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் உணர்வுப்பூர்வமாக குரல் கொடுக்க வந்துள்ளேன். இதன் மூலம் தான் எந்தவித விளம்பரமும் தேடிக் கொள்ளவில்லை. கலாசேத்திரா கல்லூரியைப் பற்றி அவதூறாகப் பேசுவது என்பது, எனது தாயைப் பற்றி பேசுவது போல் உணர்கிறேன். என் தோழி மூலமாக என்னைத் தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்க நிர்மலா என்ற பேராசிரியர் முயற்சித்திருக்கிறார்.
நான் படிக்கும் காலத்தில், அப்போது இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது அவதூறாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை நிர்மலா மற்றும் நந்தினி ஆகிய பேராசிரியர்கள் சுமத்தினர். அத்துடன் படிக்கும் மாணவிகளை காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று தவறாக வழிகாட்டி செயல்படத் தூண்டுகின்றனர்.
இதேபோன்று தற்போது உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது இந்த இரண்டு பேராசிரியர்கள் செய்கிறார்கள். குறிப்பாக மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் என்பவர், ஹரி பத்மன் கலாசேத்திராவை எடுத்து நடத்த வேண்டும் என்று பாராட்டி, பேசியதன் அடிப்படையில், ஹரி பத்மன் மீது அவதூறு பரப்புவதற்காக மாணவிகளை தவறாக வழிநடத்தி தூண்டி விடுகின்றனர்.
உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் படிக்கும்போது, எனக்கும் என் சக தோழிகளுக்கும் எந்தவித பாலியல் தொந்தரவும் ஏற்படுத்தவில்லை. தற்போது உள்ள மாணவர்களை பலியாடுகள்போல், இந்த இரண்டு பேராசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். கலாசேத்திராவில் அதிகாரத்தைப் பிடிப்பதற்காக இதுபோன்று நடைபெறுகிறது.
இந்த நிறுவனத்தில் அதிகாரம் கிடைப்பதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும், அடுத்தவர்களை குற்றம்சாட்டி வர முடியாது. சமூக வலைதளத்தில் பாலியல் தொந்தரவு குறித்து கருத்து பதிவிட்ட முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் தவறான வழிகாட்டுதல் காரணமாக பதிவிட்டிருக்கலாம்.
ஹரி பத்மன் பேராசிரியராக மிகவும் நல்லவர். அவர் மீது பொறாமை பட்டு இது போன்று குற்றம்சாட்டியுள்ளார்கள். ஹரிபத்மனுக்கு பாராட்டுக்கள் நிறுவனத்தில் கிடைக்க ஆரம்பித்தவுடன் இது போன்று குற்றச்சாட்டுகள் வந்ததுள்ளன. ஹரி பத்மன் முதுநிலை மாணவர்களுக்கு மட்டுமே பாடம் எடுக்கிறார், குற்றம்சாட்டிய 100 மாணவிகளை ஹரி பத்மன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளாரா?