சென்னை: நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லத்தி’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், இவரது திருமணம் குறித்து அவ்வப்போது சில கிசுகிசுக்கள் எழுவது தொடர்கதையான ஒன்று.
நடிகர்கள், நடிகைகள் என்றாலே அவர்கள் குறித்த சிறு செய்திகள் கூட விமர்சனம் ஆக்கப்படும் தற்போதைய சூழலில், விஷால் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறித்த கிசுகிசுப்பும் இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீப காலமாக நடிகை லட்சுமி மேனனை விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது சற்று ப்ரேக் எடுத்து மீண்டும் தொடங்கி உள்ளது. இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், “பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்று நான் உணர்கிறேன். ஆனால் இப்போது லட்சுமி மேனனுடனான எனது திருமணம் பற்றிய வதந்தி பரவி வருவதால், நான் இதை திட்டவட்டமாக மறுக்கிறேன். இது முற்றிலும் பொய் மற்றும் ஆதாரமற்றது. எனது பதிலுக்குக் காரணம், அவர் நடிகையைத் தாண்டி முதலில் ஒரு பெண். அவர் நடிகையாக இருப்பதால் இத்தைகைய கிசுகிசு இன்னும் பேசப்படுகிறது.