சென்னை:நடிகர் விஷால் தனது 46வது பிறந்தநாளையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார். முதியோர் இல்லம் வந்த நடிகர் விஷாலை வரவேற்ற கன்னியாஸ்திரிகள் மற்றும் காப்பகத்தில் இருந்த உறவினர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் கூறியதாவது, முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுவது போல் உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள் தான் கூற வேண்டும்” என்றுக் கூறினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வருவது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்துக்கு 45 வருடத்துக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டம். அவர் 45 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்த வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஓய்வெடுக்கலாம். ஆனால் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என நினைப்பது தான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம்.
“நடிகர் சங்க தேர்தல் கோரிக்கைகளில் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றிவிட்டோம்.
கடைசி கோரிக்கையான நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு முக்கியத்துவமான பெருமையான கட்டிடமாக, கலாச்சார மையமாக இருக்க வேண்டும் என்பதால் தான் தாமதமாகிறது. எம்ஜிஆர், கலைஞர் சமாதி போன்று மக்கள் பார்க்க வர வேண்டும் என நினைக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்று கூறினார்.