சென்னை:தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் கொண்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் லியோ படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கடந்த வாரம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'விஜயின் கல்வி விருது' வழங்கும் விழா நடைப்பெற்றது. மேலும், நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:அந்த வகையில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு, திருப்பத்தூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தங்க மோதிரம் மற்றும் பரிசுகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.