சென்னை:தன் நடிப்புத் திறமையாலும், ஆளுமையாலும் விஜயராஜ் எனும் தன் பெயரை மறக்கடிக்கச் செய்து, கேப்டன் என மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர், விஜயகாந்த். 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுசபுரம் என்ற ஊரில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்த பிறந்த விஜயராஜ், மதுரை திருமங்கலத்திற்கு குடிபெயர்ந்து, அங்கு 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
சினிமா ஆர்வம்: சிறு வயதிலேயே சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்த விஜயராஜுக்கு, அதன் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியதால், நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்ததால், அவரது படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார். மேலும், தான் பார்த்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்களிடம் காட்சிகளாக விவரித்துப் பேசி மகிழ்வாராம்.
இவ்வாறு சினிமா ஆர்வத்தோடு இருந்து வந்த விஜயராஜ், அதன் பிறகு படிப்பின் மீது ஆர்வம் காட்டாததால் அவரது தந்தை கீரைத்துரையில் இருக்கும் அவரது அரிசி ஆலையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை, விஜயராஜிடம் ஒப்படைத்துள்ளார். அரிசி ஆலையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்த விஜயராஜ், அவரது நண்பர்களின் உந்துதலாலும், தனக்கிருந்த சினிமா ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பதென முடிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ் படங்களை வாங்கி வெளியிட்டு வந்த சேனாஸ் பிலிம்ஸ் சினிமா விநியோகஸ்தர் முகமது மர்சுக்கின் அலுவலகம் இருந்த கட்டிடத்தில் தங்கி இருந்த விஜயராஜுக்கு, முகமது மர்சுக்குடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், தனது நடிக்கும் எண்ணத்தைப் பற்றி அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு: அந்த நேரத்தில் இயக்குநர் பி.மாதவன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருந்த ‘என் கேள்விக்கு என்ன பதில்’ எனும் படத்தை மதுரை ஏரியாவிற்கு வாங்கி இருந்தார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக். இந்நிலையில் விஜயராஜின் நடிப்பு வாய்ப்பு குறித்த கோரிக்கையை மனதில் வைத்திருந்த முகமது மர்சுக், ஒருநாள் விஜயராஜை சென்னைக்கு வரவழைத்து, இயக்குநர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினியைப் போன்ற முடிவெட்டும், ஸ்டைலுமாக இருந்த விஜயராஜைப் பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டது. அதனால் அவரை அப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பின் சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தங்கியவாறு பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் விஜயராஜ். அந்த நேரத்தில் சுதாகர், ராதிகா நடிப்பில் ‘இனிக்கும் இளமை’ படத்தை தொடங்கியிருந்த தனது நெருங்கிய நண்பர் இயக்குநர் எம்.ஏ.காஜாவிடம் விஜயராஜுக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.
விஜயராஜை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வாங்கினார். பல்வேறு அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயராஜ். அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் ‘அகல்விளக்கு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
விஜயகாந்தை விரட்டி பிடித்த இயக்குநர்:அதன் பின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபுவிடம் கதை சொன்னபோது ஆக்சன் கதையாக இருக்கிரது என பிரபு தயங்கியதால், அந்த வாய்ப்பு விஜயராஜிடம் சென்றது. இந்த படம் வெற்றிப் படமாக இருந்தது. ஒரு நாள் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் உதவி இயக்குநர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயராஜின் நெருப்பு கண்களைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்து போய்விட்டதாம். உடனே அவரை பிடிக்கச் சொல்லி உதவியாளரிடம் கூறவும், அவர்கள் விஜயராஜை விரட்டிச் சென்று அழைத்து வந்துள்ளனர்.
அப்போது நான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறீர்களா என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயராஜிடம் கேட்க, நான் நடிக்கத்தான் முயற்சி செய்து வருகிறேன். இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என கூறியுள்ளார் விஜயராஜ். இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படம் தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்ததை அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை சிரஞ்சீவியை நடிக்க வைத்து தெலுங்கு மொழியிலும் எடுத்தார். இந்த படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது.