சென்னை:ரசிகர்களால் கருப்பு எம்ஜிஆர் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் திரைத்துறையில் எளிய மனிதர்களும் வெற்றி பெற முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ஆகும்.
விஜயராஜ் என்ற தன் பெயரை சினிமாவிற்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். இவர் சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடிமுழக்கம், அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், சிவப்பு மல்லி என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம் வந்தார்.
கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984இல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து திரைத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். அதில் வைதேகி காத்திருந்தாள், இது எங்க பூமி, நாளை உனது நாள், நல்ல நாள், வெற்றி போன்ற பல படங்கள் பெரும் ஹிட் கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் எந்த ஒரு நட்சத்திரமும் கதாநாயகனாக இத்தனை படங்கள் நடிக்கவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு 100வது படம் தோல்வியாகவே அமையும் என்ற கருத்து நிலவி வந்தது ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்து வசூல் சாதனையைப் பெற்றது. தமிழ் சினிமாவில் இப்படி சாதனை மன்னனாகவே திகழ்ந்த விஜயகாந்த் அரசியல் உலகிலும் தன் திறமையால் சாதனை புரிந்து வந்தார். அரசியல்,சினிமா என இரு துருவங்களில் வந்த சோதனைகளை,சாதனையாக மாற்றிய விஜயகாந்த்தின் சாதனை சிலவற்றைக் குறித்து இங்கு காண்போம்.
விருதுகள்
- தமிழ்நாடு மாநில திரைப்பட கவுரவ விருது (1994 )
- தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (2001)
- சிறந்த இந்திய குடிமகன் விருது(2001)
- 2009 தமிழ் சினிமாவின் சிறந்த 10 லெஜண்ட்ஸ் விருது
- தமிழ் சினிமாவின் பிலிம்பேர் விருது
- 2011 கவுரவ டாக்டர் பட்டம்
- 1986 சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
- 1986 சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது
- 1988 சிறந்த குணச்சித்திர நடிகர்
- 1988 சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
- 1996 தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு
இவ்வாறாகப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விஜயகாந்த் கரோனா பெறுந்தொற்று காரணமாக இன்று(டிச.28) உயிரிழந்தார்.
இதையும் படிங்க:விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு!