சென்னை:நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' (Leo) திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக் குழு தெரிவித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் விஜயிடம் கதை சொல்லிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வெங்கட் பிரபு தான் விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு முன் விஜய் நடித்த பிகில் படத்தை இந்நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் படம் எப்போதும் கலகலப்பான படமாக இருக்கும் என்பதால் படத்தின் மீது இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 68' (Thalapathy 68) என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின. கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதில் விஜய்யின் தோற்றம் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் போட்டோஷுட் காட்சிகள் எடுக்க படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் விஎப்எக்ஸ் 3டி ஸ்கேன் தொழில்நுட்ப முறையில் விஜயின் லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷுட் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்க சென்றுள்ளனர்.
இதற்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றதாகவும், அமெரிக்க விமான நிலையத்தில் விஜய் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் உடன் பிரபல நடிகர்களும் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:"காவிரி நீரைப் பெற திமுகவுடன் சேர்ந்து காங்கிரஸும் போராடும்" - எம்.பி திருநாவுக்கரசர் உறுதி!