சென்னை :அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை நடிகர் விஜய் சந்தித்து நலம் விசாரித்தார். இதயத்தில் ஏறபட்ட பிரச்சினை காரணமாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து உள்ளார். அப்போது தந்தை எஸ்.ஏ.சி மற்றும் தாய் சோபாவுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள நடிகர் விஜய் அண்மையில் அமெரிக்கா சென்று அதற்கான போட்டோ ஷுட் பணிகளில் கலந்து கொண்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில், தனது தந்தை மற்றும் தாய் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் தாய், தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அதை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.