தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருவாயை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்; ஐ.டி. உத்தரவுக்கு தடை நீட்டிப்பு - வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை

புலி படத்திற்கான 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாகக் கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலி படத்திற்காக நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம்
புலி படத்திற்காக நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம்

By

Published : Sep 16, 2022, 7:37 PM IST

சென்னை: கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதத்தை நடிகர் விஜய்க்கு விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து, உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டு இருந்திருந்தால் ஓபிஎஸ்க்கு மரியாதை இருந்திருக்கும் - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details