‘விஜய்’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டாலே இளைஞர்கள் மத்தியில் எழும் நடனம் அடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். இந்த பெயருக்காக எளியவர்களின் துயர் துடைத்துவரும் இளைஞர்கள் ஏராளம்.
இளைய தளபதி, அண்ணா, தலைவா
மக்கள் மத்தியில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை, சினிமா ஹீரோ என்பதை தாண்டி பல தங்கைகளின் அண்ணனாகவும், நம்ம வீட்டு பிள்ளையாகவும் இருந்துகொண்டிருக்கிறார். விஜய்யின் ஆரம்பம் அவமானத்தின் ஆழம். ஆனால் அவர், தனது தந்தை போட்டு கொடுத்த பாதையில் தன்னை நிரூபித்து நிற்கிறார்.
"நாளை காலை விடிந்தால் தெரியும் விஜய்யை கோடம்பாக்கம் ஒதுக்கும்" என்று பேசப்பட்ட சூழலில் நாளைய தீர்ப்பு மூலம் விஜய் வந்து இன்றும் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் என்றால் அவர் உழைப்பு அவ்வளவு சாதாரணம் இல்லை.
தமிழ் சினிமா கண்டுகொள்ளாத நடிகர்களில் ஒருவராகத்தான் இவர் இருந்தார் ஆனால் அவர் கண்டுகொள்ள மாட்டாரா என அத்தனை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடன இயக்குநர்களும் காத்திருக்கின்றனர். காரணம் தளபதி என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு....
உலகத்துக்கான இந்திய முகம் இந்தியாவின் அடையாள முகம், தமிழ்நாட்டின் தற்போதைய முதல் முகம் என எத்தனை முகங்கள் இருந்தாலும் விஜய்யின் முகம் எளிமை.
பூவே உனக்காகவில் நடித்து புவியே உனக்காக என்று அனைவரையும் சொல்ல வைத்தார்.
தமிழ் சினிமாவின் முதல் ஹீரோ தியாகராஜ பாகவதர் தொடங்கி தற்போதைய ஹீரோவரை அனைவரும் பாடல் மூலமே வளர்ந்தனர். ஆனால் பாடல் மூலம் மக்கள் மனதில் நிலைத்தது எம்ஜிஆர், ரஜினி, விஜய்.
காதல் நாயகனாக வலம் வந்தாலும் தன்னை மாஸ் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்த முயற்சித்தார். தன் மீதான பிரபல இயக்குநர்களின் பார்வையை மாற்ற விரும்பிய விஜய் புதிய அவதாரத்திற்கு புதுமுக இயக்குநர்களை நம்பத்தொடங்கினார்.
வாய்ப்பின் வலி அறிந்த இவர், புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்து ஒட்டுமொத்தமாக தன்னை மாறிகொண்டு திருமலை என்ற படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தினார்.