சென்னை: தமிழ்த் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவருடைய நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை சமூகவலைதளத்தில் பார்க்க முடியாது.
வடிவேலு நடித்து சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
பிரச்சனையில் ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை 2017-இல் எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், ஷங்கர் முடிவு செய்தனர்.
இந்தப் படத்திற்கு ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து, வடிவேலுவை மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர். படம் தொடங்கிய சில நாள்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததால் வடிவேலுக்கு வேறு எந்த படங்களிலும் வாய்ப்பில்லாமல் போனது. சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு 'கத்தி சண்ட', 'மெர்சல்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம், ஷங்கர் - வடிவேலு இடையே பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.