சென்னை:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் குறிப்பிடத்தக்கவர் நடிகர் மணிகண்டன். இவர் நடிகர் மட்டுமின்றி வசனகர்த்தாவும் கூட. திரையில் வெளியான பல படங்களுக்கு இவர் வசனங்கள் எழுதியுள்ளார். மேலும், புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்துக்கு இவர்தான் வசனம் எழுதியவர். நடிகராகத் திரையுலகில் இந்தியா பாக்கிஸ்தான், காதலும் கடந்து போகும், பாவ கதைகள் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ராஜா கண்ணுவாக நடித்ததன் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தார்.
அதுமட்டுமின்றி, அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் பணிபுரிந்துள்ளார். இவரது சில்லு கருப்பட்டி படத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், இவர் நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படி நடிகர், உதவி இயக்குநர், வசனகர்த்தா என தனது திறமையை எல்லா துறைகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் இவர், தனித்திறமைகளில் ஒன்றான மிமிக்ரியிலும் கலக்குபவர். சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற போது பேசிய மிமிக்ரி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெய்பீம், காதலும் கடந்து போகும், ஏலே போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், கூடிய சீக்கிரம் படம் இயக்க உள்ளார்.