சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய் பீம். பழங்குடியின மக்கள், இருளர் மக்கள் வாழ்க்கை குறித்து மிக தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உண்மையை வெளிக்கொணர அயராது உழைக்கும் வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ளார்.
ஸ்டாலினின் செயல்
இப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், “நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” என ஜெய்பீம்' படக்குழுவினரை பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
படக்குழுவினரை வாழ்த்திய ஸ்டாலின் இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். பின்னர், நரிக்குறவர், இருளர் சமூகத்தினர் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் உள்ளவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி வீட்டிற்கு சென்று, சற்றுநேரம் அமர்ந்து குடும்பத்தினருடன் உரையாடினார். முதலமைச்சரின் இந்த செயல் அனைவரிடத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூகவலைதளங்களில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சரை பாராட்டிய சூர்யா
இந்நிலையில் நடிகர் சூர்யா முதலமைச்சரின் செயலை பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலம் காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது” என பதிவிட்டிருந்தார்.
“எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதலமைச்சர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி” என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்; நடிப்பு அல்ல! - நடிகர் கார்த்தி