சென்னை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பது மட்டுமின்றி, அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் (அறக்கட்டளை) மூலம் ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், நற்பணி மன்றங்கள் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது ரசிகர் அரவிந்த் (24) என்பவர் கடந்த செபடம்பர் 24ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த நடிகர் சூர்யா, எண்ணூரில் உள்ள அவரது ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று, தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். மேலும், மறைந்த அவரது ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் சூர்யாவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் படமான இது முப்பரிமாண தொழில் நுட்பத்தில் (3D) வெளியாக உள்ளது. குறிப்பாக, இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் 42வது படமாக உருவாகும் 'கங்குவா' படத்தில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
10 மொழிகளில் உருவாகும் 'கங்குவா' படத்தில், நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்