சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் படம் ‘கங்குவா’. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தைத் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு உள்ளது. சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
கங்குவா படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
முன்னதாக நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் கங்குவாவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பானது தாய்லாந்தில் நடந்து முடிந்ததை அடுத்து, சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டும் என்னும் நிலையில், படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.