சென்னை: 'நேருக்கு நேர்' படத்தில் முதலில் அஜித் தான் நடித்தார் என்று அனைவரும் அறிந்ததே. வசந்த் இயக்கிய அப்படத்தில் மற்றொரு நாயகனாக நடித்தவர் விஜய். அஜித்திடம் இயக்குனர் வசந்த் கதையே சொல்லாமல் நேருக்கு நேர் படத்தை இயக்கி வந்தார். இது அஜித்துக்கு பிடிக்கவில்லை இதனால் அப்படத்தில் இருந்து அஜித் விலகினார் என்று அப்போது செய்திகள் வெளியானது. இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார் இயக்குனர் வசந்த்.
காரணம், 'ஆசை' படத்தின் மிகப் பெரிய வெற்றியால் அஜித்திடம் கதை சொல்லாமல் படத்தை இயக்கி வந்தார். இப்போது அஜித் விலகவே என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இயக்குநர் வசந்த் மீண்டும் நடிகர் சிவக்குமார் வீட்டிற்கு சென்று சூர்யாவை நடிக்க கேட்டார்.
ஏனென்றால் ஏற்கனவே ஆசை படத்தில் சூர்யாவைத்தான் நடிக்க கேட்டார் வசந்த். அப்போது அவர் மறுத்துவிட்டார். இம்முறை சிவக்குமார் சொன்னதன் பேரில் நடிக்க ஒப்புக் கொண்டார் சூர்யா. "நானெல்லாம் சினிமாவில் நடிக்க மிகப் பெரிய கஷ்டப்பட்டேன் ஆனால் உனக்கு அதுவாக தேடி வருகிறது. நீ வேண்டாம் என்று சொல்வது பல பேரின் கனவுடா" என்று சிவக்குமார் சொல்ல சூர்யா சரி என்று சொல்லிவிடுகிறார். அப்போது சூர்யாவின் வயது 22
அப்போது இப்படத்திற்கு வைத்த பெயர் 'மனசுக்குள் வரலாமா' மணிரத்னம் தான் இப்படத்திற்கு தயாரிப்பாளர் அவர்தான் படத்தின் பெயரை 'நேருக்கு நேர்' என்று மாற்றினார். அதேபோல் சரவணன் என்ற பெயரை சூர்யா என்று மாற்றியதும் அவர்தான். அவரது 'தளபதி' படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் சூர்யா. இதனை கேட்ட சிவக்குமாரும் அகம் மகிழ்ந்தார்.
ஆனால், சூர்யா அப்போது மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். இதனால் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் வசந்திடம் நிறைய திட்டு வாங்குவார். கூட நடிப்பது சிம்ரன், சூர்யாவுக்கு நடனமும் வராது இதனால் எங்கெங்கே என்ற பாடலை சூர்யாவை ஓடவிட்டும் நடக்கவிட்டும் எடுத்திருப்பார்கள். இதனால் மனமுடைந்த சூர்யா, இனி நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் கார்மென்ட்ஸ் பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் சொல்லியுள்ளார்.