தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது... நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும்: நடிகர் சூரி நம்பிக்கை - Actor Soori says I will definitely get justice

'நீதிமன்றத்தையும் காவல் துறையையும் நம்பியுள்ளேன். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது' என பண மோசடி வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது
தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது

By

Published : Mar 29, 2022, 3:10 PM IST

சென்னை:கடந்த 2015ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகிப் படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இதனிடையே, பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பளப் பணத்திற்குப் பதிலாக மேலும் சில கோடிகளைக் கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாகப் படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாகத் தெரிகிறது. (ரமேஷ் குடவாலா - நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை)

நடிகர் சூரி நம்பிக்கை

அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக 3.10 கோடி ரூபாய் பெற்று நிலத்தை விற்பனை செய்தனர். இந்நிலையில் நிலம் வாங்கிய பிறகுதான் பல பிரச்னைகள் அதில் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நிலத்தைத் திருப்பி வாங்கிக்கொள்வதாகவும்; பணத்தைத் திருப்பி தருவதாகவும் ஒப்பந்தம் ஒன்றைச் சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்சம் ரூபாய் மட்டுமே ரமேஷ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதித்தொகையான ரூ. 2.70 கோடியைச் சூரிக்கு தராமல் ஏமாற்றி வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது - நடிகர் சூரி நம்பிக்கை

இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக அடையாறு காவல்துறையினர் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்ற உத்தரவில், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதனைக் கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தையும் காவல்துறையும் நம்பியுள்ளேன் - நடிகர் சூரி

மேலும் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி, அதை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அடையாறு காவல் நிலையத்திலிருந்த இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையர் மீனா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்குத்தொடர்பாக நடிகர் சூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதனடிப்படையில் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்பு, நடிகர் சூரி நேற்று (மார்ச்.28) ஆஜரானார். புகார் தொடர்பாக விரிவான வாக்குமூலத்தை நடிகர் சூரி போலீசாரிடம் அளித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், பண விவகாரத்தில் ஏமாந்துள்ளேன். இந்த வழக்கு அடையார் காவல் நிலையத்தில் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்து மாற்ற உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன்.

நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

திருப்திகரமான விசாரணை நடைபெறவில்லை எனக் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையிலான விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக விசாரணைக்காக வந்துள்ளேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நம்பி உள்ளேன். விசாரணை நன்றாகவே நடந்தது. 2 ஆண்டுகள் காலமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. என்னை காவல்துறை அழைத்தபோது நேரில் ஆஜராகி அனைத்து பதில்களையும் தெரிவித்துள்ளேன். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details