சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அறியப்படும் கமல்ஹாசனின் 68வது பிறந்த நாள் விழா நாளை (நவ. 7) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் சிவகுமார் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது, "நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறு யாரும் செய்ய முடியவில்லை.
சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார். கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்.
'டூப்' போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர். 'மீண்டும் ஒரு சூர்யோதயம்' படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.