சென்னை:இளைய தலைமுறையினரிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும் வகையில் தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'குறளோவியம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டியை தமிழ் இணையக் கல்வி கழகம் நடத்தியது.
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 12 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் கருத்துக்களை மையப்படுத்தி ஓவியங்கள் வரைந்தனர். இதில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் திருக்குறள் மேஜை நாட்காட்டி புத்தகம் வடிவமைத்து அதில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
குறளோவியம் ஓவியக் கண்காட்சி:இந்த நாட்காட்டி புத்தகத்தை எல்லா ஆண்டுகளிலும் பயன்படுத்தும் வகையில் ஆங்கிலத் தேதி மட்டும் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறள் ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் படைப்பாற்றலை சிறப்பிக்கும் வகையில் சிறந்த முறையில் வரையப்பட்ட ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஏப்ரல் 21) தொடங்கி வைத்தார்.