சென்னை: நடிகர் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக நடிக்கும் அங்காரகன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் மோகன் டச்சு, நடிகர் சத்யராஜ், ஸ்ரீபதி, நாயகி நியா, நடிகர் கலைப்புலி ஜி சேகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு பாடலாசிடியர் கு.கார்த்திக் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது: "இயக்குநர் மோகன் டச்சு இந்த படத்தின் கதையை சொல்வதற்காக வீட்டிற்கு வந்தார். படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விருப்பமா என்று கேட்டார். நீங்கள் முதலில் கதையை சொல்லுங்கள் என்றேன். முழு கதையை கேட்ட பின்பு, கதை நன்றாக இருந்தது. வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்தேன். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு கதை கேட்பதில் ரொம்பவும் மெனக்கெடுவது இல்லை.
கதாநாயகனாக இருந்த போது சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமா கையில் உள்ளேன். மேலும், தற்போது என் கைவசம் 20 படங்கள் உள்ளன. எனது தாய் ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அனால் நான் இன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.
நான் இங்கு கலந்து கொள்வதற்கு என் தாய் தான் காரணம். எனது தாய் ஒரு முருகன் பக்தர். முன்னதாக அவர் எனது குடும்பத்தினரிடம் சொன்னார், எனது மகன் ஒரு பெரியாரிஸ்ட் அவனுக்கு மதச் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. அதனால் என்றேனும் ஒரு நாள் நான் மரணிக்கும் போது என் மகனை சடங்குகள் செய்ய சொல்லி வறுபுறுத்தக் கூடாது எனக் கூறினார். அப்படி கூறியது தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம்" என்றார்.
இதையும் படிங்க:உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் திரைப்படம் பார்க்கும் ரஜினிகாந்த் !
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு தமிழ் மற்றும் அரை ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று என்னை வைத்து படம் எடுக்கும் மற்ற மொழி இயக்குனர்களிடம் சொல்லி விடுவேன். தாய் மொழி தெரியாமல் இருந்தால் தான் கேவலம். மற்ற மொழிகளை தேவை எனில் கற்றுக்கொள்ளலாம்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்யராஜ்; "இயக்குனர்கள் என் மீது நம்பிக்கை வைத்து அப்போதே நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களை கொடுத்து என்னை வளர்த்துவிட்டனர். அதன் பயனைத்தான் இப்போதைய இயக்குனர்கள் அறுவடை செய்கின்றனர். கமல்ஹாசன் என்னை கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார். அப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. எம்ஜிஆர் மாதிரி என்னால் நடிக்க முடியாது.
கட்சி தொடங்கி எம்எல்ஏ ஆவது தான் அரசியல் என்று நினைக்கின்றனர். சமூக கருத்துகளை பேசுவதும் அவர்களுக்கு பின்னால் நின்று செயல்படுவதும் கூட அரசியல் தான். நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றோர் துணிந்து தைரியமாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுவும் அரசியல் தான்.
தம்பி திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். ஏனென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரது எழுச்சி மிகப் பெரிய எழுச்சி. அப்படிப்பட்ட மனிதனின் பின்னால் போய் நிற்க வேண்டும் என்பதற்காக சென்றேன். அங்கு எனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் அதுவும் ஒரு நல்ல அரசியல் தான்.
நான் கடவுள் மறுப்பு கொள்கையை முதல் முதலில் பேச சென்றபோது நிறைய பேர் என்னை தடுத்தனர். நான் நடிகனாக இருப்பது முக்கியமா இல்லை பெரியாரிஸ்டா இருப்பது முக்கியமா என்றால், நான் பெரியாரிஸ்டாக இருப்பது தான் முக்கியம். சமூக நீதிக்கு பின்னால் நிற்பது எனது கடமையாக நினைக்கிறேன். மணிவண்ணனுக்கு பிறகு அவர் போல் ஒரு இயக்குனர் எனக்கு கிடைப்பது கடினம். சித்தாந்த ரீதியாக எனக்கு குருநாதர். அமைதிப்படை 3 மணிவண்ணன் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். அவர்தான் இல்லையே.
இப்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப என்னால் கதை எழுத முடியாது. வியாபாரத்திலும் சம்பளத்திலும் முதலிடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார். என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். தளபதி விஜய், தல அஜித் அப்படித்தான் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை மாற்றினால் நன்றாக இருக்காது. உலக நாயகன் என்றால் அது கமல்ஹாசன். அவர் நன்றாக நடிக்கிறார் என்பதால் நடிகர் திலகம் என்று அழைக்க முடியுமா? அதுபோல் தான் சூப்பர் ஸ்டாரும்" என்று சத்யராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“முதலில் பிடிக்கவில்லை, இப்போது பழக்கப்படுத்தி கொள்கிறேன்” என தமன்னாவின் காதலர் விஜய் வர்மா கூறுவது என்ன?