13 வருடங்களுக்குப் பிறகு படம் இயக்கும் நடிகர் சசிகுமார் சென்னை:சுப்பிரமணியபுரம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் வீடியோ மூலம் நன்றி தெரிவித்த சசிகுமார், தான் அடுத்த படம் இயக்க உள்ளதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் 2008ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் சசிகுமார். அப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இப்படத்தில் ஜெய் கதாநாயகனாகவும், ஜோடியாக சுவாதியும் நடித்திருப்பார். மேலும் இவர்களுடன் இயக்குநர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. காலங்கள் பல கடந்தும் ரசிகர்கள் மனதில் இன்னும் இப்படம் நிலைத்துள்ளது. இப்படமானது தமிழ் மொழியில் மட்டுமல்லாது இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2010-ல் 'ஈசன்' படத்தை இயக்கினார், சசி குமார் . பின்னர் நடிகரான சசி குமார் படம் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் படம் இயக்க உள்ளதாக தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக மாறியது. மனிதம் பேசிய படமான இதை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படம் சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றியையும் நற்பெயரையும் பெற்றுத் தந்தது. தற்போது சில படங்களில் சசிகுமார் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: வெளியானது 'ஜெயிலர்' பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்குவதாக சசிகுமார் அறிவித்துள்ளார். ‘சுப்பிரமணியபுரம்’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த அவர், அவ்வறிவிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
சசிகுமார் இயக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகவில்லை. சுப்பிரமணியபுரம் படத்தை பார்த்துதான் அனுராக் காஷ்யப் இந்தியில் ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தின் தொடக்கத்தில் சசிகுமாருக்கு நன்றி தெரிவித்திருப்பார். அந்த அளவுக்கு அப்படம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சசிகுமார் இயக்கும் புதியபடம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மெலும் அது பீரியட் படம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் நீண்ட நாட்களாக போய்க்கொண்டு இருக்கிறது.
ஆனால் குற்றப் பரம்பரை நாவலை படமாக இயக்க சசிகுமார் நீண்ட வருடங்களாக முயற்சித்து வருகிறார். இதில்தான் சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ‘எது எப்படியோ சசிகுமார் மீண்டும் படம் இயக்குகிறார் என்ற செய்தி நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல செய்திதான்’ என்கின்றனர் நெட்டிசன்கள்.
இதையும் படிங்க: "பாராசக்தி முதல் மாமன்னன்" வரை பா.ரஞ்சித்துக்கு பதிலளித்த உதயநிதி