சென்னை:இயக்குநர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பருத்தி வீரன். இப்பட உருவாக்கத்தின் போது இயக்குநர் அமீருக்கும், இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் படத்தின் பட்ஜெட் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் ஒன்றிற்குப் பேட்டி அளித்த ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை அநாகரிகமாகப் பேசியது மட்டுமில்லாமல் திருடன் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு, பூதாகரமாக வெடித்த நிலையில், அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார், பாரதிராஜா எனப் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். மேலும் இப்படிப் பேசியதற்காக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த விஷயம் பெரிதாகிய நிலையில், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் நான் பேசியது அமீர் அண்ணாவின் மனதைப் புண்படுத்தி இருந்தால் அதற்கு என்னுடைய வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமார், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் சமுத்திரக்கனியும் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்கச் செய்ய வேண்டியது. எந்த பொது வெளியில் எகத்தாளமா உட்கார்ந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேட்கக்கணும். நீங்கக் கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைத்துத் தூர எறியவேண்டும்.
அன்னைக்குக் கொடுக்காமல் ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாமல் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஏன் என்றால் கடனா வாங்கின நிறையப் பேருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அப்புறம் பருத்தி வீரன் திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பளப் பாக்கி இருக்கிறது. பாவம் அவர்களெல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவர்கள். நீங்கதான், அம்பானி பேமிலியாச்சே. காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:"போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது" - பருத்திவீரன் பட பிரச்சினையை மீண்டும் கிளறிய சசிகுமார்!