சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். பின்னர், இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, இன்று (டிச.29) அதிகாலை சுமார் 6:00 மணியளவில் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், அலைகடலென ரசிகர்களும், திரளான பொதுமக்களும் இங்கு வந்து நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் இழப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியும் அவர் உடல்நிலை தேறி வந்து விடுவார் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால், தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது அவர் இறந்தை செய்தியை அறிந்த நான் என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அவர் எப்போது அனைவரிடமும் நல்ல முறையில் அனுகுபவர் ஆவார்.