துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார்.
ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. வாய்க்கு வந்த கருத்துகளை ரஜினி பேசிவருவதாகவும், பெரியார் குறித்து அவதூறு பரப்பியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் வெளிப்படையாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டி இந்நிலையில், சென்னையில் உள்ள தனது வீட்டின் முன் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பெரியார் குறித்து தான் வெளியிட்ட கருத்துகள் அவதூறானவை இல்லை என்றும், அது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், சில பத்திரிகைகளின் நகல்களையும் செய்தியாளர்கள் முன் காண்பித்தார்.
அதேபோல், நடக்காதது எதையும் தான் கூறவில்லை என்ற ரஜினி, ‘சாரி... மன்னிப்பு கேட்க முடியாது’ எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சந்திப்பில் மேலும் பேசிய ரஜினி, “பெரியார் செய்த சம்பவம் மறுக்கக்கூடிய ஒன்று அல்ல; அது மறக்கவேண்டிய ஒன்று” என்றும் கூறியுள்ளார்.