'மாத்தியோசி' படத்தின் மூலம் அறிமுகமான வில்லன் நடிகர் ராஜசிம்மன். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 'குட்டிப்புலி' 'கட்டபொம்மன்' 'கொம்பன்' 'என்னை அறிந்தால்' 'காஞ்சனா 2' உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ... கஷ்டப்படுபவர்களுக்கு உணவளித்து வரும் நடிகர் ராஜசிம்மன்! - இலவச உணவளித்து வரும் ராஜசிம்மன்
சென்னை: நடிகர் ராஜசிம்மன் நாள்தோறும் 150க்கும் மேற்பட்டோருக்கு உணவளித்துவருகிறார்.
தற்போது நடிப்பது மட்டுமல்லாமல் படத்தை இயக்கும் வேலையிலும் ஈடுபட்டுவருகிறார். ஆரம்பக் காலங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடும்பொழுது ஒருவேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட இவர், தற்போது சினிமாவில் குறிப்பிடும் நபர்களில் ஒருவராக மாறியுள்ளார். இதையடுத்து கஷ்டப்படும் உதவி இயக்குநர்களுக்கும், பொது மக்களுக்கும் தினந்தோறும் சுமார் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு அளித்துவருகிறார் ராஜசிம்மன்.
சாம்பார் சாதம், ஊறுகாய், தூய்மையான குடிநீர் என ராஜசிம்மன் இதற்காக சில ஆயிரம் ரூபாயைச் செலவிடுகிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தச் சேவையை தற்போது வரை நடைபெற்றுவருகிறது. சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவிற்கு அருகில் சாலையோரத்தில் ஆள்வைத்து சமைத்து இலவசமாக உணவை விநியோகித்து வந்த ராஜசிம்மன், தற்போது கரோனா தொற்று காரணமாக சமைப்பதற்கு என்று தனியாக வீடு எடுத்து ஆள் வைத்து சமைத்து வருகிறார்.