சென்னை: சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் டி.நகர் பகுதியில் ஜெயம்மாள் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வருகிறார். அந்த வீடு பிரபல நடிகர் பிரபுதேவாவின் சகோதரரும், நடிகருமான நாகேந்திர பிரசாத்துக்குச் சொந்தமான வீடு எனக் கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு விக்னேஷ் நடிகர் நாகேந்திர பிரசாத் இடம் வீடு வாடகைக்குக் கேட்டு உள்ளார். அப்போது நாகேந்திர பிரசாத் இந்த வீட்டினை கேர் டேக்கர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு விட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் நீங்கள் ரூபாய் 25 லட்ச லீசுக்கு பணம் செலுத்துங்கள் அதன் பிறகு அந்த நிறுவனத்திடம் இருந்து தாங்கள் மாதம், மாதம் 36 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விக்னேஷ் இந்த வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு 25 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். அந்த நிறுவனமானது திடீரென கடந்த ஒரு வருடமாக நாகேந்திர பிரசாத்திற்குப் பணத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளது.
இதனால் நாகேந்திர பிரசாத் அந்த வீட்டிற்கான வாடகை பணம் வராததால் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த விக்னேஷை உடனடியாக காலி செய்யும்படி தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் விக்னேஷ் நாங்கள் பணத்தைச் செலுத்தியுள்ளோம் தங்களால் வீட்டை காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.