சென்னை:தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். இதுவே இவரது வெற்றிக்கு சான்று.
நடிகர் கார்த்திக் எல்லோரும் சொல்வது போல் நடிக்க வந்ததது ஒரு விபத்து என்பார். ஆம் இவரும் நடிக்க வந்தது ஒரு விபத்து தான். இயக்குனர் இமயம் பாரதிராஜா காரில் வந்து கொண்டிருந்தபோது எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக சிராய்த்துக் கொண்டான். உடனடியாக அவனை தன் காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்தில் உள்ள வீட்டு போர்டிகோ பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த பையனைப் பார்த்தார். அடுத்தநாள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய ’அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நாயகன் மட்டுமே கிடைக்கவில்லை, ஏங்கிகொண்டு இருந்த அவருக்கி கார்திக்கை பார்த்ததும் உற்சாகம் ஏற்பட்டது.
நடிகர் முத்துராமனின் மகன் என்று அறிந்ததும் உடனே பேசி, ஓகே செய்து, அடுத்தநாள் காலையில் முரளியை குமரி மாவட்டத்துக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார். ஆம் கார்த்தியின் நிஜப் பெயர் முரளி. பாரதிராஜா அவரை கார்த்திக் என மாற்றினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தனது முதல் படம் என்றே தெரியாத வகையில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் கார்த்திக்.
அதன்பிறகு அடுத்தடுத்து எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போனார் கார்த்திக். 80களில் தொடங்கிய கார்த்திகின் பயணத்தில், பல வெற்றி படங்கள் மற்றும் வெள்ளி விழா படங்கள் ஏராளம். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கின் நடை, பாவனை, ரியாக்ஷன். இவை அனைத்தும் தான் கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.