சென்னை:திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டரில் பட்டியலின மக்களை இழிவாகப் பேசி காணொலி ஒன்றைப் பதிவுசெய்தார். இதன் காரணமாக அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கலகம் செய்யத் தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மீரா மிதுன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 15) இறுதி அவகாசம் வழங்கியிருந்தது.