தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, இன்று காமெடி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் மன்சூர் அலிகான் இதுவரை சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், சூளைமேடு, பெரியார் பாதை மேற்கிலுள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீடு, அரசு புறம்போக்கு நிலத்தில் இரண்டாயிரத்து 400 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மாநகாட்சி அலுவலர்கள் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானின் மனைவி அபிதா பானு மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த வீட்டில் தான் வளர்க்கும் பூனை மாட்டிக்கொண்டதாகவும் அதை மீட்க திறக்க வேண்டும், என்றும் கோரிக்கை வைத்தார்.
வெளிநாட்டு ரகத்தை சேர்ந்து அந்த பூனை வீட்டுக்குள் சிக்கி ஒரு மாதம் ஆன நிலையில், அதை மீட்பதற்கு சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு மணி நேரம் வீட்டை திறக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஒரு மாதம் காலமாக பூனை உணவின்றி இருந்ததால் உயிரிழந்து விட்டது. எனவே வீட்டை திறக்க வேண்டாம் என மன்சூர் அலிகான் மறுப்பு கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மன்சூர் அலிகான், ”தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், அந்த சொத்தை வழங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்னை காரணமாக, என் வீட்டின் மீது தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான் வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்னை கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை. இருந்தாலும், இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மன்சூர் அலிகான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனு