சென்னை:நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மேலும் இதில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனிருத் இசை அமைத்திருந்தார். விக்ரம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கமலின் திரை வாழ்வில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றது. ’
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடத்தில் வெவ்வேறு கோணங்களில் விமர்சனங்களைப் பெற்றது. விக்ரம் படம் கொடுத்த வெற்றியினால், கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் வாய்ப்புகளை பெற்று தயாரித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரித்து வருகிறது.
மேலும் மணிரத்னம் படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. இது மட்டுமின்ற சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில், கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது எச்.வினோத் இப்படத்துக்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.