ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2019ஆம் ஆண்டு பிப்ரவர் 12ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது எழுந்த எதிர்ப்பையடுத்து நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நிலைக்குழு அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021ஆம் ஆண்டில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான படங்களுக்கு மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன. இந்த மசோதாவை எதிர்த்து திரைப்படத் துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரைப்படக் கலைஞர்கள் இணைய வழியில் ஆலோசனையும் நடத்தினர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குறித்து திரையுலகினரின் கருத்துகளை கேட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை.27) தனது கருத்தை தெரிவிக்க கமல் ஹாசன் டெல்லி சென்றார்.
தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்று (ஜூலை.28) சென்னை விமானநிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.